பத்திரிகையாளராகவும் சமூக விமர்சகராகவும் பரவலாக அறியப்பட்டிருக்கும் ஞாநியின் இன்னொரு பக்கம் நாடகம், சின்னத்திரை, பெரிய திரை சார்ந்த கலையார்வங்கள். 31 வருடங்களாக பரீக்ஷா நவீன நாடகக்குழுவை நண்பர்களுடன் நடத்திவரும் ஞாநி(55), சின்னத்திரை இயக்குநராக அறிமுகமாகி 21 வருடங்கள் ஆகின்றன. ஞானபாநு விஷுவல் மீடியா யூனிட்டை அமைத்து தன் படங்கள் அனைத்தையும் ஞாநி உருவாக்கி வந்துள்ளார். ஞாநியின் முதல் படம் அணுசக்திக்கு எதிரான விழிப்புணர்வைப் பரப்புவதற்காக எடுக்கப்பட்ட கதை வடிவிலான ஆவணப் படம்.
1989ல் ஞாநி ஒரு தொண்டு நிறுவனத்துக்காக உருவாக்கிய குறும்படம் இரண்டு பெண்களின் வாழ்க்கைக் கதைகள் வழியே, பெண்களின் உரிமைகள், பிரச்சினைகள் பற்றிச் சொல்லும் ”48.2 பர்சென்ட்”.சென்னை தூர்தர்ஷன் 1990ல் இரண்டாவது சேனலைத் தொடங்கியதும் அதில் வெளியான முதல் 13 வாரத்தொடர், ஞாநியின் ‘விண்ணிலிருந்து மண்ணுக்கு”.எழுத்தாளர் அறந்தை நாராயணனின் நாவல் ஞாநியின் இயக்கத்தில் திரை வடிவமானதும் மயிலாப்பூர் அகாடமி அந்த ஆண்டின் சிறந்த தொலைக்காட்சி கதாநாயகி விருதை நடிகை வைஷ்ணவிக்குப் பெற்றுத் தந்தது.
எழுத்தாளர் சுஜாதா குழந்தைகள் உலகத்தை அடிப்படையாக வைத்து எழுதிய இரு கதைகள் ஞாநியால் தொலைக்காட்சிப் படங்களாக்கப்பட்டன. 1993ல் ஒளிபரப்பான ‘ பிக்னிக்’ அந்த ஆண்டின் சிறந்த தொடர், சிறந்த தயாரிப்பாளர், சிறந்த இயக்குநர் என்று மூன்று விருதுகளை சாந்தோம் கலைத் தொடர்பு நிலையத்திடம் பெற்றது. நடுவர் குழுவின் தலைவராக இருந்தவர் இயக்குநர் மகேந்திரன்.1994ல் ஞாநி உருவாக்கிய சுஜாதாவின் பூக்குட்டி தூர்தர்ஷனில் குழந்தைகள் தின சிறப்பு ஒளிபரப்பாக ஒரு மணி நேரப் படமாகக் காட்டப்பட்டது.
இந்திய சுதந்திரத்தின் பொன்விழா ஆண்டான 1997ல் தூர்தர்ஷனுக்காக வேர்கள் என்ற குறுந்தொடரை ஞாநி உருவாக்கினார். சரித்திரத்தில் மறக்கப்பட்டவர்களான விடுதலைக்குப் போராடிய பல பெண்களும், பெண்ணுரிமைக்குக் குரல் கொடுத்தவர்களும் இந்தத் தொடரின் பாத்திரங்களாக மக்கள் மன்றத்தில் மீண்டும் வலம் வந்தனர்.
நகைச்சுவை எழுத்தாளர் மெரீனாவின் முதல் தொடர்கதை காதலென்ன கத்தரிக்காயா. இது வெளியாகி 35 வருடங்கள் கழித்து 2000மாவது ஆண்டில் ஞாநியால் 13 வாரத் தொடராக உருவாக்கப்பட்டு பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாயிற்று.
பகுத்தறிவு சிந்தனையாளர் தந்தை பெரியார் பிறந்து 125 வருடங்கள் ஆனதையொட்டி, 2002ம் ஆண்டில் lசென்னைத் தொலைக்காட்சிக்காக ஞாநி பெரியாரின் வாழ்க்கையைக் கதைப்படமாக ஐந்து வாரத் தொடராக அய்யா என்ற தலைப்பில் உருவாக்கினார். பெரியாரின் வாழ்க்கை முழுநீளக் கதைப் படமாக உருவாகி ஒளிபரப்பானது இதுவே முதல் முறையாகும். பின்னர் பெரியார் திராவிடர் கழகத்தினர் இந்தப் படத்தை தமிழ்நாட்டின் பல நகரங்களில் சிறப்புக் காட்சிகளாகக் காட்டியது.
இவை தவிர, சுற்றுச் சுழல், குழந்தைக்ளுக்கான விளையாட்டின் மூலம் கல்வி, பெண்ணுரிமை, பாலியல் தொழிலாளர் உரிமை போன்ற விஷயங்கள் தொடர்பான சுமார் 40க்கும் மேற்பட்ட ஆவணப் படங்களைப் பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்காக ஞாநி எழுதி இயக்கி தயாரித்துள்ளார். இவற்றில் சில மும்பை திருவனந்தபுரம் உலகப் பட விழாக்களில் திரையிடப்பட்டன.
2007ல் பெரிய திரையில் ஒரு சோதனை முயற்சியில் ஞாநி ஈடுபட்டார். ஒற்றை ரீல் இயக்கம் என்ற பெயரில் தொடங்கிய இந்த முயற்சியின் நோக்கம் , வணிக சினிமா பார்ப்பதற்கு அரங்குக்கு வரும் பார்வையாளர்களுக்கு, மாறுபட்ட ரசனைக்கான சிறு படங்களை அறிமுகப்படுத்துவதாகும். ஒரே ஒரு ரீல் நீளமுள்ள பத்து நிமிடக் கதைப் படங்களை மெயின் பிக்சருக்கு முன்னால் காட்டும் இந்த முயற்சியில் உடன் ஒத்துழைத்தது பிரமிட் சாய்மீரா நிறுவனம். படத் தயாரிப்புச் செலவைக் கொடுத்து, படத்தைத் தன் வசம் உள்ள அரங்குகளில் காட்டவும் முன்வந்தது. எழுத்தாளர் திலீப் குமாரின் சிறுகதையை அடிப்படையாக வைத்து எடுத்த முதல் ஒற்றை ரீல் ‘திருமதி ஜேம்ஸ் இப்போது என்ன செய்ய வேண்டும் ?’ தமிழகத்தில் 40 அரங்குகளில் 40 எழுதாளர்களால் தொடங்கிவைக்கப்பட்டது. இந்தப் படம் நடிகர் அஜீத் நடித்த பில்லா திரைப்படத்துக்கு முன்பாக 40 திரை அரங்குகளில் சுமார் ஒரு மாத காலம் தொடர்ந்து திரையிடப்பட்டது.
அடுத்த ஒற்றை ரீல் எழுத்தாளர் அன்பாதவனின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டது. பிப்ரவரி 2008ல் இதை ஞாநி உருவாக்கினார். படத்தணிக்கை முடிந்த பிறகும், சில நடைமுறைப் பிரச்சினைகளினால் இன்னும் அந்தப் படம் திரையிடப்படவில்லை. |